மதுரையில் இருந்து இன்று பகல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்க 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். நான்காவது நுழைவு வாயில் வழியாக வெளியே வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி முழக்கமிட்டு அதிமுக தொண்டர்கள் அப்போது வரவேற்றனர்.
புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் ஓங்குக என்றும், ஓபிஎஸ் வாழ்க என்றும் அவர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒரு தொண்டர் மட்டும், ஓபிஎஸ் வாழ்க என்பதற்கு பதிலாக இபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டார். அதனைக்கண்டதும் அங்கு சுற்றியிருந்த அதிமுகவினர் ஒரு கணம் வாயடைத்து நின்றனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த நபர், அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என கத்தினார். இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.