சென்னை: ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் காலை 10 மணியளவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.
வேட்புமனு மறுக்கப்பட்டது
இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த ஓட்டேரியைச் சேர்ந்த ஓமப் பொடி பி. பிரசாத் சிங்குக்கு வேட்பு மனு மறுக்கப்பட்டது.
காழ்ப்புணர்ச்சியால் மனு வழங்கவில்லை
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய ஓமப் பொடி பி. பிரசாத் சிங், “எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியிலிருந்து வருகிறேன். ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு வேட்பு மனு வழங்கவில்லை. 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிமுக உறுப்பினர் அட்டையை வைத்திருக்கிறேன். காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட மனு வழங்கவில்லை.
எம்ஜிஆர் பெயர் புறக்கணிப்பு
அதிமுகவின் சட்டவிதிகளை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்கின்றனர். மாற்றியமைத்த சட்டத்தின்படி தேர்தலை நடத்துகின்றனர். எம்ஜிஆர் பெயரை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் புறக்கணிக்கின்றனர். எம்ஜிஆர் பெயரை அவர்கள் சொல்லவில்லை.
மேலும், அதிமுக தலைமைக் கழகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் வைத்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் வைத்துள்ளார் என அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஓமப் பொடி பி. பிரசாத் சிங்கை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி, சரமாரியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக அலுவலகத்திலிருந்து அவரை அடித்து வெளியேற்றினர்.
மேலும் படிங்க: அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்