தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நுழைவு வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். அதில், " குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 விழுக்காடு இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.மேலும் தற்போது கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்று,, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நுழைவு வகுப்புகளில் 2021-22 கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் உள்ள இடங்கள் குறித்த விபரங்களை ஜூன் 24-ஆம் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பெறவேண்டும்.
25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள எண்ணிக்கைகளில் விவரங்களை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித் துறை அதன் இணையதளத்திலும் ஜூலை 3 ந் தேதி வெளியிடவேண்டும்.
ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நுழைவு நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான மாணவர்களின் விபரங்களை பள்ளிகள் அவர்களின் அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட வேண்டும்.ஆகஸ்ட் 10-ஆம் தேதி பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள இடங்களைவிட குறைவாக விண்ணப்பித்து இருந்தால் அவர்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரங்களை ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனியார் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.