எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், ஐஎன்ஐ, சிஇடி (INI, CET) போன்ற தனித்தேர்வு நடத்தக் கூடாது என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "திறமையான மருத்துவர்களை உருவாக்க வேண்டும், தகுதியான மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும், மாணவர் சேர்க்கையில் நிலவும் முறைகேட்டை தடுக்க வேண்டும், ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமைகளிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் போன்ற காரணங்களைக் கூறி, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற ஒரே நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்தது. இது மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிய மத்திய அரசு, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற 11 மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் தனியாக ஐஎன்ஐ, சிஇடி என்ற புதிய நுழைவுத் தேர்வை புகுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, ஐஎன்ஐ, சிஇடி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து மத்திய கல்வி நிறுவன இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவற்றுக்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு (நீட்) மட்டும் நடத்த வேண்டும். இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்த வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள ‘நிறுவன உள் ஒதுக்கீடு (Institutional in house Reservation) அரசியல் சட்டத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.
எய்ம்ஸ் மருத்துவ நிறுவனங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை, அவை அமைந்துள்ள மாநிலங்களின் மாணவர்களுக்கே வழங்க வேண்டும். மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமை தமிழ்நாடு அரசிடமிருந்து 2016ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது. எனவே, 2016ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போல், மாணவர் சேர்க்கையை நடத்தும் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிடம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.