- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989,
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016,
விதி 16 மற்றும் திருத்த விதிகள் 2018இன்படி முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டு 2021 ஜூலை 20 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
- (அரசாணை (நிலை) எண்.56, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நாள் 2021 ஜூலை 20)
இக்குழுவில், நிதித் துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் - தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முதல் கூட்டம் வரும் 2021 ஆகஸ்ட் 17 அன்று மாலை 5 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில்,
- வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள்,
- இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி
- மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் பட்டியல் சாதியினர்
- பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015இல் அத்தியாயம் IV-A–இல் உள்ள பிரிவுக் கூறு 15A(11)–இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள்
ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.