காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 39ஆவது வார்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி ரூ.1.34 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை இன்று (ஏப்.4) சிவி எம்பி, க.சுந்தர் எம்எல்ஏ, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை வாரியத் தலைவர் மதிவாணன் கலந்துகொண்டு மாணவிகள் தங்கும் விடுதியை கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்து கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிதிராவிட நலத்துறை வாரியத்தலைவர் மதிவாணன், 'கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் குறைகள் இருந்திருக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதியில் உள்ள பணியாளர்களையும் மாணவ-மாணவிகளை நல்வழியில் நடத்தாமல் இருந்ததாலும் கண்காணிக்காத காரணத்தினாலும், குறைகள் இருந்திருக்கின்றன. அந்தக் குறைகளை களைவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குறைகள் குறித்து கண்டறிந்தால் முதல்கட்டமாக முன்னெச்சரிக்கை செய்து வருகிறோம்.
ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் தவறு செய்தால் நடவடிக்கை: மேலும், விடுதிகளில் எத்தனை மாணவ-மாணவிகள் வந்து தங்கி இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போல் தான் உணவுப்பொருட்கள் எடுத்திருக்க வேண்டும். அதற்கு உண்மையான கணக்கு வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தி எச்சரிக்கிறோம். சில இடங்களில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
தற்போது, நாங்களும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். இனிமேல், ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் அதுபோல் தவறுகள் ஏற்படாது, தவறுகள் செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுரு நாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாஜி மனைவி மீது இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு புகார்... நீதிமன்றம் என்ன சொல்கிறது?