சென்னை: சென்னையைச் சேர்ந்த து. கருணாநிதி என்ற மனுதாரர், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாளராக 27 ஆண்டுகள் (23.08.1990 - 31.01.2018) பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 16.02.2009 முதல் தேர்வுநிலைப் பணிக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வழங்குமாறு, அப்பல்கலைக் கழகத்தின் மாணவர் கலந்தாய்வு மய்யப் பேராசிரியர் மற்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் இத்தொகை மனுதாரர் ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக மாணவர் கலந்தாய்வு மய்யப் பேராசிரியர் மற்றும் தலைவர், பல்கலைக்கழகப் பதிவாளர், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் என தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், தான் ஒரு மூத்த ஆதிதிராவிடர் குடிமகன் என்றும் தமக்கு பல்கலைக்கழக நிர்வாகம் 13 ஆண்டுகள் பணிபுரிந்த தேர்வுநிலைப் பணிக்கு ஊதிய நிர்ணயம் செய்து வழங்கவில்லை என்றும் தெரிவித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தலையிட்டு ஊதிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரும்படி கோரியிருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் இப்பிரச்சனையில் தலையிட்டு, து. கருணாநிதிக்குச் சேர வேண்டிய தேர்வுநிலை நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் கலந்தாய்வு மய்யப் பேராசிரியர் மற்றும் தலைவருக்கு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:'தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்...' கிறிஸ்துவ மத போதகர்கள் குறித்த அப்பாவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு