சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.
பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சியின் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். பின் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ’அதிமுக அலுவலக கலவரம், சூறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச்செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடுமையான குற்றங்கள் இருந்தபோதிலும், விசாரணையைத் தொடங்குவதில் சிபிசிஐடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்கள் மீது தெளிவான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணைக்குழு கேட்டதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல் காவல் துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவது என்கிற தனது குற்றச்சாட்டுக்கு அதன் செயல்பாடின்மையே சான்றாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு, சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி தகுந்து உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி தவறினால், வேறொரு அமைப்புக்கு விசாரணையை மாற்றுவது கட்டாயமாகிறது என வலியுறுத்தி உள்ளார்.
எனவே, அதிமுக தலைமை அலுவலம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் படி தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கூடுதல் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது - அமைச்சர் சி.வி. கணேசன் தகவல்