சென்னை: விமான நிலைய சர்வதேச முனையத்திற்கு கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளா்வுக்குப் பின்பு விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 42-க்கும் மேற்பட்ட விமானங்கள் வருகின்றன. அதில் 31 விமானங்கள் இரவு நேரம் வரும் விமானங்கள். இதனால் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள், வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் ஆகியோரை பரிசோதிப்பதற்காக 56 கவுண்டர் குடியுரிமை கவுண்டர்கள் உள்ளன. அதில் புறப்பாடு முணையத்தில் 22 கவுண்டர்கள், 34 கவுண்டர்கள் வருகை பகுதியிலும் அமைந்துள்ளன.
பயணிகள் அவதி: ஆனால் இந்த கவுண்டர்களில் பெரும்பாலான கவுண்டர்களில் குடியுரிமை அலுவலா்கள் இருப்பதில்லை. எனவே சில கவுண்டர்கள் மட்டுமே திறக்கப்படுவதால் சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் குடியுரிமை சோதனை முடிந்து வெளியே வர இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி கொண்டு இருக்கின்றனர்.
மேலும் குடியுரிமை பகுதியில் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகள் கூட்டம் இருப்பதால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏசிகள் செயல் இழந்து, பயணிகள் புழுக்கம் வேர்வையில் நனையும் நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது சில பயணிகள் மயங்கி விழும் சூழ்நிலையும் உருவாக்கி உள்ளது.
மேலும் சமூக இடைவெளி போன்ற எதுவுமே கடைபிடிக்காமல் சந்தை கடையில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் இருப்பது போல் சென்னை விமான நிலைய குடி உரிமை பகுதி உள்ளது. இதுக்குறித்து சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
விரைவில் தீர்வு: சென்னை விமானநிலையம், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் குடியுரிமை பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. எனவே உள்துறை அமைச்சகம் தான் குடியுரிமை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.
இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் கூடுதலாக குடியுரிமை அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால் தான் முழு அளவிலான கவுண்டர்கள் செயல்பட முடியவில்லை.
தற்போது சுமார் 45 க்கும் மேற்பட்ட குடியுரிமை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக பணி அமர்த்தப்பட இருக்கின்றனா். அவர்கள் வந்த பின்பு, இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சென்னை விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இதே பதிலை விமான நிலைய அதிகாரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூறி வருகின்றனா்.
இந்நிலையில் இம்மாதம் 28 ஆம் தேதியில் இருந்து சென்னையில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கிறது. அதை பார்ப்பதற்காக வெளிநாட்டு பார்வையாளர்கள், வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தினர் பெரும் அளவு சென்னைக்கு விமானத்தில் வரவிருக்கின்றனா்.
சிறப்பு கவுண்டர்கள்: இதனால் சென்னை சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.எனவே ஒன்றிய குடியுரிமை அமைச்சகம் உடனடியாக,சென்னை விமானநிலையத்திற்கு கூடுதல் குடியுரிமை அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.
மேலும், இது குறித்து மற்றொரு விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, "உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு என்று தனியாக இமிகிரேஷன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை விரைவாக சோதனை செய்யப்பட்டு வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை விமானத்திலிருந்து இறங்கிய முதல் விமான நிலையம் வெளியே செல்லும் வரை அழைத்து செல்ல தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த கேள்வி; ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் - அமைச்சர் பொன்முடி தகவல்!