சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
சென்னை மயிலாப்பூரில் 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி பிறந்தவர் சாந்தா. பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற அவர், 1949ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவராக பணியில் சேர்ந்தார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை, உலக தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.
புற்றுநோய் தொடர்பாக தேசிய, சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ள சாந்தா, மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றார். அதன் மூலம் கிடைத்தை பணம் முழுவதையும் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார் என்றால் அது மிகையல்ல.
உலகில் எங்கு புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டிருந்த சாந்தா, எளிமை, பணிவு, ஓய்வின்றி உழைத்தவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
93 வயதான சாந்தா, இதய நோய், மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜனவரி 19) அதிகாலை இயற்கை எய்தினார்.