சென்னை: அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
அதில், "தானும் அமைச்சரும் ஒன்றாக வாழ்ந்தோம். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவர் ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்து, அந்தரங்கப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடிகை சாந்தினியும், அவரது வழக்கறிஞர் சுதன் என்பவரும் பொய் புகார் அளித்ததாக தெரிவித்தார். மேலும், வழக்கறிஞர் சுதன் தன்னிடம் மூன்று கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றஞ்சாட்டினார்.
வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ்
இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மே 23ஆம் தேதி சென்னையில் தன்னை வந்து சந்தித்த மணிகண்டன், தன் மீதான புகார் நடவடிக்கையை கைவிட்டு, தனக்கெதிரான இந்நடவடிக்கையை நிறுத்தி, சமரசமாக பணத்தைப் பெற்றுகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, நடிகை சாந்தினி ஒத்துக்கொள்ளாமல், சட்ட நடவடிக்கையைத் தொடர அறிவுறுத்தியநிலையில், தனக்கெதிராக மணிகண்டன் அவதூறு பரப்புவதாக வழக்கறிஞர் சுதன் குறிப்பிட்டுள்ளார்.
பணம் பறிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாக கூறிய அவதூறு கருத்துக்கு, மணிகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிட்டால் மான நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் வழக்கறிஞர் சுதன் அனுப்பிய நோட்டீசில் எச்சரித்துள்ளார்.