'ஜனங்களின் கலைஞன்' எனப் போற்றப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இறப்புக்குத் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் நேற்று விளக்கமளித்தனர். அதில், "கரோனா தடுப்பூசிக்கும் விவேக்கிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலிக்கும் சம்பந்தம் இல்லை. கரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக...
நடிகர் விவேக் நகைச்சுவை வாயிலாக எளிதில் புரியும்வண்ணம் மூட நம்பிக்கைகளைப் பொட்டில் அடித்தாற்போல் சாடினார்.
'சாமி' திரைப்படத்தில் 'சிற்றறிவு'க்கு எதிராக அவர் சுழற்றிய சாட்டையடி நகைச்சுவைத் துணுக்குகள் என்றும் ஒரு மைல்கல்தான். அப்படத்தின் ஒரு காட்சியில்...
பட்டியலின சமுதாயச் சிறுவர்களுடன் (ஒரு சிறுவனை தலைமீது தூக்கிக்கொண்டு) தனது வீட்டுக்குள், 'வெள்ளை நிறத்தொரு பூனை, எங்கள் வீட்டில் வளருது கண்டீர்' என்ற பாரதியின் பாடலைப் பாடிக்கொண்டே நுழைவார்.
அப்போது அவரது மனைவி, 'என்னங்கண்ணா யாரு இதுங்கள்ளாம்' எனக் கேட்க, அதற்கு விவேக், 'என்ன இதுங்களா... குழந்தைகள்டீ, பாவம் களைச்சுப் போயி வந்திருக்கா அவாளுக்குச் சோறு குடு' என்பார். உடனே அவரது மனைவி, 'அபச்சாரம் அபச்சாரம்' எனக் கூற, 'என்ன அபச்சாரம்' என்பார்.
தொடர்ந்து, காக்கைக்கு உணவு வைக்க வெண்ணிற ஆடை மூர்த்தி காக்கைகளை அழைப்பார். உடனே விவேக் தனக்கே உரிய பாணியில், 'என்னா தாத்தாவுக்கு நாக்கு இழுக்கிறதே ஸ்ட்ரோக்கா' என்று கிண்டலடிப்பார். அதற்கு அவரது மனைவி, 'ஒளராதீர் காக்காவுக்கு சாதம் வைக்கிறார்' என்பார்.
தொடரும் விவேக், 'ஓ காக்காய்க்கு வைப்பீர் இவாளுக்கு வைக்க மாட்டீர்களா' என்று சொல்லுவார். அப்போது, குறுக்கிடும் வெண்ணிற ஆடை மூர்த்தி, 'காக்காக்கள் நம்முடைய பித்ருக்கள், முன்னோர்கள்' என்று கூற, 'ஓ சாதா காக்கா ஒங்க கிராண்ட் ஃபாதரா அண்டங்காக்கா ஒங்க கிரேட் கிராண்ட் ஃபாதரா - யார்கிட்ட விட்றீங்கண்ணா ஒங்க ரீலு' என்று கிண்டலடிப்பார்.
சாஸ்திரத்த பழிக்காதடா சண்டாளா
தொடர்ந்து வெண்ணிற ஆடை மூர்த்தி, 'சாஸ்திரத்தைப் பழிக்காதடா சண்டாளா' என்று கோபப்பட, 'மன்னிச்சுக்கோங்க தாத்தா. காக்காய்ங்க எங்கையாவது திருடியோ பொறுக்கியோ வயித்தக் கழுவிக்கிடும், பத்தாததற்கு அதுங்கள பாதுகாக்க புளூகிராஸ் இருக்கு. ஆனா இந்த மாதிரி பாவப்பட்டாளுக்கும், படிப்பறிவு இல்லாதவாளுக்கும் ஞானம் கொடுக்குறத்துக்கு நம்மள மாதிரி ஒயிட்கிராஸ்தான இருக்கு' என்பார்.
இதுபோன்ற பல மூட நம்பிக்கைகளை ஒழித்து, சமுதாயத்தை தன்னம்பிக்கை மிக்கதாக கட்டமைக்க பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தவர்.
கையூட்டுக்கு எதிராக...
'சாமி' திரைப்படத்தில் போக்குவரத்துக் காவலர் விவேக்கிடம் கையூட்டுப் பெறும் நோக்கில் ஆவணங்களைக் கேட்பார். அனைத்தும் சரியாக இருக்கும், இதையடுத்து, 'எட்டு போடத் தெரியுமா' என போக்குவரத்துக் காவலர் கேட்க, 'எட்டு போடத் தெரியாமல் லைசென்ஸ் கொடுப்பாளா!' என பதிலடி தர அப்போதும் விடாத போக்குவரத்துக் காவலர் விவேக்கை மடக்க, 'அப்ப ஒரு ஏழு போடு' என்று கேட்பார்.
அவர் கையூட்டுக்காகத்தான் இப்படி கேட்கிறார் எனப் புரிந்துகொண்ட விவேக் அவருக்குப் (சமூகத்திற்கும்தான்) பாடம் புகட்ட, 'ஏழு என்னவோய் ஏழரையே போட்றேன். ஒக்காருவோய்' என்பார். ஏழரையா எனப் போக்குவரத்துக் காவலர் இழுக்க... வேகமாய் இருசக்கர வாகனத்தைச் செலுத்தும் விவேக் ஒருகட்டத்தில் நிறுத்துகிறார். அப்போது, போக்குவரத்துக் காவலரின் ஒரு கை இல்லாமல் இருக்கும்.
- இது கையூட்டு வாங்குவோருக்கு ஒரு குட்டு
அரசு எந்திரங்களுக்கு எதிராக...
சென்னை மாநகராட்சியை 'திருமலை' படத்தில் மிக அழகாக நயம்பட சாடி அசத்தியிருப்பார்; அதில் அவரது துணிச்சல் மிகவும் பாராட்டுக்குரியது.
இதேபோல் அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை லாவகமாக பாளையத்து அம்மன் படத்தில் விளாசியிருப்பார். அது சிரிக்க மட்டுமல்ல; சிந்திக்கவும் தூண்டியது.
திரையுலக பாரதி
சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை (சாதி, வர்க்கம் உள்பட...) நகைச்சுவைகளால் நார்நாராய் கிழித்துத் தொங்கவிட்டவர். அதற்காக அவரை திரையுலக பாரதி என்றே வர்ணிக்கலாம்.
சிரிப்பு மருத்துவர்
பல்வேறு கனவுகளோடு சென்னை நோக்கிப் புறப்படும் கிராமப்புற இளைஞர்களின் உணர்வை விவேக் எடுத்தியம்பும் நகைச்சுவை துணுக்குகள் ரசிகர்களை மெய் மறந்து சிரிக்கவைத்ததோடு இல்லாமல், மக்களின் மன அழுத்தங்களையும் போக்கி மருந்தூட்டியது. இதனால்தான் அவர் நகைச்சுவை மருத்துவர்.
மதுரை மண்ணின் மைந்தன்
1961 நவம்பர் 19 அன்று அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார் நடிகர் விவேக். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி - இலுப்பையூரணி. இவர் திரைத்துறையில் 1987ஆம் ஆண்டு, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த 'தாராள பிரபு' படத்தில் நடித்தார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
சின்னக் கலைவாணர்
இவரது நகைச்சுவை - கையூட்டு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைத் தாக்குவதால் இவரை சின்னக் கலைவாணர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் அழைக்கின்றனர்.
'பாளையத்து அம்மன்', 'லவ்லி', 'அள்ளித்தந்த வானம்', 'யூத்', 'காதல் சடுகுடு', 'விசில்', 'காதல் கிசு கிசு', 'பேரழகன்', 'சாமி', 'திருமலை' போன்ற திரைப்படங்களே இதற்குச் சான்றுகளாகும்.
விவேக் என்னும் விதை
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார் விவேக். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிடம் மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்த இவர், பசுமைக் கலாம் திட்டம் என்ற பெயரில் மரக்கன்றுகளை நடுவதில் பெரும் ஆர்வம் காட்டினார். 'நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்' எனக்கூறி அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
மகனின் மறைவும் ஆன்மிக நாட்டமும்
தனது மகனின் மறைவுக்குப் பிறகு ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார் விவேக்; பல ஆன்மிகச் சேவைகளை ஆற்றினார். சுவாமி விவேகானந்தரின் நெறிமுறைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!