தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் (பிப். 19) மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தவறாமல் வந்து வாக்களிக்கும் சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. குறிப்பாக ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட சினிமா நடிகர்கள் வாக்களிக்கவில்லை.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக சென்று வாக்களித்தார்.வாக்களிப்பதற்காக அவருடைய வீட்டிலிருந்து ரசிகர்கள் படை சூழ சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
விஜய் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் பெற்றது. ஆனால், இந்த முறை, நடிகர் விஜய் வந்த சிவப்பு கார் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் வந்த சிவப்பு நிற காரின் இன்சூரன்ஸ் காலவதியாகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘கடந்த சில நாட்களாக விஜய்யின் கார் இன்சூரன்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
காப்பீட்டின் நகல் இங்கே உள்ளது, அதில் காப்பீடு மே 28, 2022 வரை செல்லுபடியாகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழாவில் விருது பெறும் ’புஷ்பா’