தமிழ்நாட்டில் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கரோனா தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழ்நாடு அரசு கடந்த நவம்பரில் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனால் நடிகர் விஜய் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து திரையரங்கு இருக்கைகளை 100 விழுக்காடு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதனையடுத்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப்பின் திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னை முழுவதும் 'நன்றி முதல்வரே' என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஆனால், 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தால் கரோனா பரவல் அதிகமாகும் எனப் பல மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து மத்திய அரசும் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில், இன்று (ஜன. 08) உயர் நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்றது. கூடுதல் காட்சிகளை அனுமதித்த அரசு 50 விழுக்காடு இருக்கைகளுடன் மட்டும் திரையரங்குகளில் திரைப்படங்களைத் திரையிட உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டத்தை திரும்பபெற்றால் மட்டுமே வீட்டுக்கு திரும்பி செல்வோம் - விவசாயிகள் உறுதி