சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசி சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளியிட்டுவருகிறார். எனவே அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு இரண்டின் கீழ் எஸ்.வி. சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் காவல் துறையினர் தன்னை கைதுசெய்யக்கூடும் எனக்கூறி, முன் பிணை கோரி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். இந்த நிலையில் எஸ்.வி. சேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையானார். அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: எஸ்.வி. சேகர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார்... தேசியக் கொடியை அவமதித்தாக குற்றச்சாட்டு!