நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 10 மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதே மண்டபத்தில்தான் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தனது ரசிகர்களைச் சந்தித்தார், ரஜினிகாந்த். அப்போது அவர், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவேன்' எனத் தெரிவித்திருந்தார்.
அரசியல் அறிவிப்புக்குப் பிறகு அவருடைய ரசிகர் மன்றம் 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து, அவ்வப்போது ஆலோசனைகளை நடத்திவந்தார், ரஜினி. அதே நேரத்தில் 2.0, காலா, பேட்ட, தர்பார் என்று வரிசையாக திரைப்படங்களிலும் நடித்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' என்ற படத்திலும் நடித்து வருகிறார், ரஜினி.
இந்நிலையில், அவருடைய அண்ணன் சத்யநாராயணன், ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் ரஜினிகாந்த் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சி எப்போது தொடங்குவது, கட்சியின் பெயர், கட்சிக்கொடி போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து நின்று சந்திக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சித் தொடங்குவார் என்றும் கட்சியின் முதல் மாநாடு ஆகஸ்ட் மாதம் நடத்துவார் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு அன்று தனது கட்சிக்குப் பெயர், கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய, முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகைய சூழலில் இன்று நடைபெறும் இக்கூட்டத்தில் தன்னுடையை ரசிகர்களைப் போருக்குத் தயார்படுத்துகிறாரா அல்லது தனது ரசிகர்களுடன் 'போட்டோஷூட்’ நடத்தப்போகிறாரா என்பது கூட்டத்திற்குப் பிறகே தெரியவரும்.
இதையும் படிங்க: 'ரஜினியே சொன்னாலும் சிஏஏ திரும்பப்பெறப்படாது'