சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காய்கறி விற்பனை மார்க்கெட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டை புதுப்பித்து தரவும், ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்த படாமல் உள்ள மார்க்கெட்டை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார். ஆய்வின் போது ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மார்க்கெட்டில் 100 சிறு கடைகள் இயங்கி வருகின்றன. நூற்றாண்டுகளுக்கு மேலாக சேவை மக்களின் பயன்பாட்டில் இந்த கடையில் உள்ளன. சைதாப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் அதிக அளவு மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் சென்று வந்தனர். நூற்றாண்டுக்கு மேலாக மார்க்கெட் சைதாப்பேட்டை பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
மார்க்கெட்டை புதுப்பித்து தருவதற்கான திட்ட மதிப்பீடுகள் மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மார்க்கெட் புதுப்பித்து தரும் வரை இங்கு உள்ள வியாபாரிகள் வேறு இடத்தில் மாற்றி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். புதுப்பித்த பின்னர் இங்குள்ளவர்களுக்கு மட்டுமே மீண்டும் மார்க்கெட்டில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சாலையில் ஆதரவின்றி இருப்பவர்களுக்கான இரவு நேர ஆண்கள் தங்கும் விடுதி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இரவு நேரங்களில் ஆண்கள் தங்குவார்கள்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு 2017ஆம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 தமிழ்நாடு மாணவர்கள் எழுதியுள்ளனர். அவர்களில் 16,517 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதி உள்ளனர்.
தேசிய தேர்வு முகமையிடமிருந்து விபரங்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவை பணிகள் வளாகத்தில் இருந்து 104 உதவி மையத்தில் 50 மனநல ஆலோசர்கள் நியமனம் செய்யப்பட்டும், முதலமைச்சரின் ஆயிரத்து நூறு உதவி மையத்தில் இருந்து 60 ஆலோசகர்களை கொண்டும் இந்த மாணவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது.
ஜூலை 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதில் 564 மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாணவர்களை 104 சேவை மையத்தில் பணிபுரியும் மனநலம் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அப்பொழுது மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி படிப்பிற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக மாவட்ட மனநல ஆலோசகர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து இந்த குழுவினர் ஆலோசனை வழங்குவார்கள்.
மேலும் பெற்றோர்கள் நீட் தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று விட்டனர் என அவர்களை திட்டவோ,கடிந்து பேசவும் கூடாது. ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் அமைச்சரை நேற்று சந்தித்த பொழுதும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தருவதற்கான மசோதா குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.
இதற்கான கருத்துக்களை ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய கல்வித் துறையிடம் கேட்கும் பொழுது தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு சாதகமான பதில்கள் அளிப்பார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வு அமல்படுத்த பின்னர் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தான் அதிக அளவில் 535 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
சித்த மருத்துவ பல்கலைக்கழக தொடர்பான மசோதாவிற்கு ஆளுநருக்கான விளக்கங்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஓரிரு தினங்களில் அனுப்பப்படும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் செவிலியர் கல்லூரி இல்லாத 32 மாவட்டங்களில் செவிலியர் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
உக்கரையில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வேறு நாடுகளில் படிக்க வைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டோம். தேசிய மருத்துவ ஆணையம் உக்ரைன் நாட்டில் படித்த மாணவர்கள் அதேப் பாடங்கள் நடத்தப்படும் கல்லூரியில் படித்தாலும் உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு