சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கையை, சத்தியமூர்த்தி பவனில் இன்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். அதில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல், பூரண முதுவிலக்கை நடைமுறைப்படுத்துதல், கல்வித்துறையில் மாற்றம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
- கல்வியில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து உணவு, உறைவிடம் வழங்கி குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- புதிதாக தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.
- அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
- பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவாதங்கள் செழுமை பெற மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
- புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர ஒதுக்கப்பட்டுள்ள 7.5% ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்து திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
- திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
- பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து, வேட்பாளர் தேர்வு மற்றும் உட்கட்சி பூசல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, எங்கள் வேட்பாளர்களில் 3 நபர்கள் தவிர அனைவரும் நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் கீழ் நிலையை சேர்ந்தவர்கள் என்றார். எங்களது 25 வேட்பாளர்களில் யாரேனும் ஒருவரை, கட்சிப்பணி செய்யாதவர் அல்லது கட்சிக்கு தொடர்பு இல்லாதவர் இருந்தால் காட்டுங்கள், அவர்களை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: அமமுக சங்கரன்கோவில், கிள்ளியூர் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு