சென்னை: சென்னை விமான நிலைய பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட, அரியலூரை சேர்ந்த புலித்தேவன் (23) உள்ளிட்ட மூன்று பேரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா். ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். அதில், புலித்தேவன் மட்டும் அதன்பின்பு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால், ஆலந்தூா் நீதிமன்றம், புலித்தேவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, சென்னை விமான நிலைய காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை விமானநிலைய போலீசாா், தனிப்படை அமைத்து, புலித்தேவனை தீவிரமாக தேடி வந்தனா். நேற்று (ஆக. 26) அவருடைய சொந்த ஊரான அரியலூரில், புலித்தேவனை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்பு காவல் துறை அவரை சிறையில் அடைத்தனா். புலித்தேவன் மீது அரியலூர் மாவட்டத்திலும், பல்வேறு செயின் பறிப்பு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு... 5 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு