தென்காசி: சங்கரன்கோவிலில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களுள் ஒன்றான, ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவிலின் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
எல்லா சிவ ஸ்தலங்களிலும் ஆடித்தபசு விழா நடைபெறும் என்றாலும் சங்கரன்கோவில் நடைபெறும் தபசு காட்சி நிகழ்வு பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்விற்கு பின் ஒரு சுவராஸ்யமான வரலாற்றுக் கதை உள்ளதாக ஊரார் தரப்பில் கூறப்படுகிறது.
அதாவது, ஹரி வேறு சிவன் வேறு என நிணைத்துக் கொண்டிருக்கும் கோமதி அம்பாள், ஒரு நாள் ஹரியையும் சிவனையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என விரும்பி அதற்காக ஊசி முனையில் கடும் தவம் இருக்கிறாள். அந்த தவத்தின் பலனாக சுவாமி சங்கரராகவும் நாராயணராகவும் காட்சி அளிப்பதே தபசு காட்சி என கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி ஆடித்தபசு திருவிழா கோவில் உட்பிரகார வீதிகளில் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து இந்த வருடம் மக்கள் மத்தியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தபசுகாட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக காட்சியளிக்கும் நிகழ்வும், தங்க சப்பரத்தில் வீற்றிருக்கும் கோமதி அம்பாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வும் மிக விமர்சையாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, நெல், பருத்தி, வத்தல், உள்ளிட்ட பயிர்களை சப்பரம் மீது வீசி வழிபட்டனர். வருங்காலங்களில் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்யவும் இவ்வாறு பயிர்களை சப்பரம் மீது வீசி வழிபடுவர்.
மேலும், இந்த அற்புதமான நாளில் சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்பாளை வணங்கினால் மங்கள காரியங்கள் கைகூடும், செல்வ வளம் பெருகும், குடும்பம் செழிக்கும் போன்ற ஐதீகங்களின் பேரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், முன்னாள் அமைச்சர் வி.எம் ராஜலட்சுமி, நகர் மன்ற துணை தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்