சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான மையத்தை அமைத்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் ஸ்ரீமதி கேசன் கூறும் பொழுது,
"ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் இதுவரை 18 பலூன் செயற்கைக்கோள்கள், இரண்டு சப் ஆர்பிட்டல் செயற்கைக்கோள்கள் மற்றும் இரண்டு ஆர்பிட்டல் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்குபேசன் சென்டரில் நிறுவனத்தினை தொடங்கி உள்ளோம்.
செயற்கைக்கோள்கள் உருவாக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு, இளம் விஞ்ஞானிகளுக்கும் விண்வெளி அமைப்பு சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படும். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்குபேசன் சென்டரில் இருந்து முதலாவதாக" அஸாதிசாட் " செயற்கைக்கோள் செலுத்த உள்ளது, இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சியினால் அவர்கள் செயற்கைக்கோளுக்குரிய போர்டுகளை தயாரித்து அனுப்பி உள்ளனர். அவற்றை இணைத்து செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு ஶ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு அளித்து விடுவோம். ஆகஸ்ட் 15ஆம் தேதி விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மையத்தில் பார்வையிட வருபவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றால் அவர்களுக்கு செயற்கைக்கோள் குறித்து முழுவதுமாக விளக்கப்படும். நாசா மையத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் விண்வெளி ஆய்வு மையத்தை முதலமைச்சர் உருவாக்க வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: மாதவிடாய் முதல் கருத்தரித்தல் வரை - பெண்களுக்கு உதவும் வாட்ஸ் அப் செயலி