சென்னை: பூக்கடை நாராயண முதலி தெருவில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் ஜெயின், அவரது இளைய சகோதரர் ஸ்ரீபால் ஜெயின் ஆகியோர் மகேந்திரா ரிப்பன்ஸ் என்ற நிறுவனம் நடத்திவருகின்றனர். மேலும், மின்சாதன பொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் இவரது கடைக்குள் அடையாளம் தெரியாத மூன்று பேர் நுழைந்து இருவரையும் கொடூரமாகக் கத்தியால் வெட்டியுள்ளனர். பின், கல்லாவில் இருந்த இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தைக் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூட அந்நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும், காயம்பட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பூக்கடை காவல் துறை வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி உதவியுடன் அந்நபர்களைத் தேடிவந்தது.
தலைமறைவாக இருந்தவர்கள் கைது
இது தொடர்பாக, தலைமறைவாக இருந்துவந்த வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக், அஜித், விஜய், அஜித், ஷைன் ஷா ஆகிய ஐந்து பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடை ஊழியருக்கும் கொள்ளையில் தொடர்பு
விசாரணையில் கைலாஷ் ஜெயினுக்குச் சொந்தமான மற்றொரு கடையில், முகமது ஆசிக் பணிபுரிந்துவந்ததும், கைலாஷ் ஜெயினிடம் பணம் நிறைய உள்ளதைத் தெரிந்துகொண்ட முகமது ஆசிக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடமும் காவல் துறையினர் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!