சென்னை: பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார் (38) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 29 ஆம் தேதியிலிருந்து அந்த சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாததால், பள்ளிக்கு அவர் செல்லவில்லை.
தற்போது உடல்நிலை சீரடைந்த நிலையில், நேற்று காலை சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தினர். ஆனால், அந்த சிறுமி பள்ளிக்குச் செல்ல பயந்து அழுதார். அதோடு “அந்த பள்ளிக்கு நான் போகமாட்டேன்; வேறு பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று சிறுமி அடம்பிடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து பெற்றோர் நைசாக பேசி சிறுமியிடம் விசாரித்ததில், அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. அந்த சிறுமியை பள்ளியிலுள்ள (பியூன்) கடைநிலை ஊழியா் ராஜ் (38) என்பவர், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் பள்ளிக்குச் சென்று புகார் செய்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் சரிவர பதில் கூறாமல் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி