சென்னை புறநகர்ப் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கின்றது. இதனை கட்டுப்படுத்த சென்னை காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் காவல்துறை அலுவலர்களுக்கு கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், சென்னை காவல்துறை கூடுதல் ஆணையாளர் தினகரன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு காவல்துறையினர் தனிப்படை அமைத்து புறநகர்ப் பகுதியில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
அதேபோல், புனித தோமையார் மலை மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் மகுடிஸ்வரி தலைமையிலான காவலர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த தாமு (எ) தாமோதரன் (35), கிஷோர் (45) என்பவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்களது வீட்டில் 40 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் 40 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.