சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராஜ் டாக்டரான இவர் தனது விலை உயர்ந்த செல்போனை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்த ஹரிபிரசாத் என்பவர் அந்த செல்போன் தனக்கு பிடித்து உள்ளதாகவும் அதனை தான் வாங்கி கொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள உணவகத்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்த ஹரிபிரசாத்திடம் சென்ற விக்னேஷ் ராஜ் தனது செல்போனை கொடுத்துள்ளார், செல்போனை பார்த்துக்கொண்டிருந்த ஹரிபிரசாத் செல்போனை பரிசோதனை செய்வது போல் வெளியே சென்றார் அவரை விக்னேஷ் ராஜ் பின் தொடர்ந்து செல்ல முற்பட்டப்போது, உள்ளே அமர்ந்து கொண்டு இருப்பவர் தனது அக்கா என்றும் பயப்பட தேவையில்லை பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு ஹரிபிரசாத் சென்றவர் அத்துடன் வரவில்லை.
இதுகுறித்து அந்த பெண்மணியிடம் கேட்டபோது ஒரு புராஜக்ட் விஷயமாக தன்னை வர வைத்ததாகவும் அவர் யார்? என தனக்கு தெரியாது என்று அப்பெண் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த விக்ணேஷ்ராஜ் அப்போது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் எஸ்டேட் ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை தேடிவந்தனர்.
இதையடுத்து மேடவாக்கத்தில் தங்கியிருந்த ஹரிபிரசாத்தை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிபிரசாத் வேலை ஏதும் இல்லாததால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது, வழிப்பறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் அதன் பின் நூதன முறையில் கொள்ளையடிக்க வேண்டும் என்பதால் ஆன்லைனில் விலை உயர்ந்த செல்போன்களை விற்பனை செய்யும் நபர்களை குறிவைத்து அவர்களை ஒரு ஓட்டலுக்கு வரவழைப்பார். அதற்கு முன்பாக தனக்கு ஒரு புராஜக்ட் செய்து கொடுக்க வேண்டும் என ஆன்லைனில் விளம்பரம் செய்வார்.
அதைப்பார்த்து வரும் பெண்ணிடம் நன்கு பழகியது போல் பேசி அக்கா என அழைத்து உணவகத்திற்கு அழைத்து சென்று விடுவார், செல்போனை விற்பனை செய்ய வரும் நபரை உள்ளே உட்கார வைத்து விட்டு அந்த பெண்ணை தனது அக்கா என கூறி பணம் எடுத்து வருவதாக கூறுவார். இதனை நம்பும் செல்போனை விற்க வருபவர்கள் கவனத்தை திசை திருப்பி செல்போனை பறித்து செல்வதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரிடமிருந்து எட்டு பவுன் நகையுடன் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: டிராபிக் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த நால்வர் கைது!