தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து 6 மாதத்துக்கு ஒரு முறை பேரவைக்கு அரசு அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அது நடக்கவில்லை.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில், 2,386 கோடி ரூபாய் வருவாயுடன், வருவாய் உபரி மாநிலமாக இருந்த தமிழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், 1.31 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது.
1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் கடன் சுமை 10 ஆண்டுகளில் 4.95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அதிமுக அரசு கூறுகிறது. அது நிச்சயம் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். அதிமுக அரசு 40,000 கோடி ரூபாய் வட்டி கட்டப் போகிறது. கடன்களை வாங்கி புதிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், கடன்களை வாங்கி வட்டி கட்டினால் மேலும் வட்டி சுமை அதிகரிக்கும். சம்பளம் கொடுக்க பணமில்லாததால் 35% அரசு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இடையேயான விகிதம் 50 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. மாநிலத்தின் நிதிக் குறியீடுகள் மோசமடைந்துள்ளன. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, 2005- 2011 வரை 10.9% இருந்து, 2011-2017 வரை 4.6% ஆக குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் குறையும் என நிதிக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் மக்கள் தத்தளிக்க 1,000 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவைக் காக்க விளக்கேற்றி உறுதிமொழி எடுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதம்