சென்னை கிரீன்வேஸ் சாலை வளாகத்தில் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறைக்கு வந்த ரகசிய புகாரை அடுத்து, அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தனர்.
அப்போது பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட அழுகிய உடல், ஆடையைக் கைப்பற்றிய காவல் துறையினர் அதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பினர். சம்பவ இடத்தில் தடயவியல் வல்லுநர்களும் ஆய்வுசெய்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.
கண்டறியப்பட்ட சடலத்தில் பெண் ஆடை இருந்ததால் அவை பெண்ணின் சடலமாக இருக்கலாம் எனவும், கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட சடலத்தின் அடையாளங்கள் ஏதும் தெரியாததால், உடற்கூராய்வு, தடயவியல் அறிக்கைகள் கிடைத்த பின்னரே இதர விவரங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள் இல்லங்கள் இருக்கும் கிரீன்வேஸ் சாலை ரயில் நிறுத்தத்தில் இதுபோன்ற சம்பவம் நடத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.