சென்னை மந்தைவெளி நாராயண செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவர் அடையாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹேம்நாத் (15) தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.04) காலை சிறுவன் ஹேம்நாத் குளிப்பதற்காக வீட்டின் குளியலறைக்குச் சென்று வாட்டர் ஹீட்டரை போட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அலறித்துடித்து கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை சுகுமார் குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று கீழே விழுந்துகிடந்த சிறுவனை மீட்டு வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதால் சுகுமார் தனது மகனான சிறுவன் ஹேம்நாத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜவ்வாதுமலை கோர விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை நேரில் வழங்கிய அமைச்சர்!