தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியில் சேருவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மாதம் ரூ. 15 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 5 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பணிக்கு ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டது. இதன் பின்னர் 5 ஆயிரம் கேங்மேன் பதவிகளை 10 ஆயிரமாக உயர்த்தி மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். கேங்மேன் பதவிக்கு ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை 40 இடங்களில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வில் தகுதிப் பெற்ற 23 ஆயிரம் பேருக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 15 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர். அவர்களின் பட்டியல் மின்சார வாரியத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டது. ஆனால், பல்வேறு வழக்குகளின் காரணமாக அவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் நிலுவையில் இருந்தன.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறும்போது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதுடன் உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். கேங்மேன் பணி நியமனம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்தத் தடை நீக்கப்பட்டது. அத்துடன் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்து 613 கேங்மேன் பணியிடங்களில் நியமனம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. தேர்வானவர்கள் அந்தந்த மேற்பார்வையாளரின் கட்டுப்பாட்டில் பணியை மேற்கொள்ள உள்ளார்கள்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழக தொலைக்கல்வியில் சேர விண்ணப்பம்!