சென்னை: துபாயில் இருந்து பெரிய அளவில் விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அலுவலர்கள் துபாயில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் துபாயிலிருந்து வந்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான பயணிகளை தீவிரமாக சோதித்தனா். அதில், வந்த பயணிகள் அனைவரையும் சோதனை நடத்தி முடித்தனர். ஆனால் யாரிடமும் எந்த தங்கமும் சிக்கவில்லை.
இதையடுத்து விரக்தியடைந்த சுங்க அலுவலர்கள், விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்களிடம் அனுமதியுடன் துபாயிலிருந்து வந்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் ஏறி பரிசோதித்தனர். விமானத்தின் கழிவறைகளுக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகள், விமானத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பாா்சல்களை கண்டுபிடித்தனர்.
அனைத்து பார்சல்களையும் சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பார்சல்களைப் பிரித்து பார்த்ததில் தங்கப்பசைகள், கட்டிகள் இருந்தன. அதேபோல், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில் சோதனை நடத்தினர். அங்கும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களை பறிமுதல் செய்தனர். அவைகளிலும் தங்கப்பசைகள், கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல், விமானத்திலும் விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிகளிலும் மொத்தம் 60 பார்சல்களை கைப்பற்றினர். இந்த 60 பார்சல்களில் 9.02 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும். இதையடுத்து சுங்க அலுவலர்கள் தங்கத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் விமான நிலைய வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் காட்சிகள் ஆகியவைகளிலும் ஆய்வு செய்கின்றனர். ஒரே நாளில் ஒரே விமானத்தில் ரூ.4.21 கோடி மதிப்புடைய 9.02 தங்க கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் அனைவரும் தங்கப் பார்சல்களை விமானத்திலும், வருகை பகுதிகளிலும் போட்டு விட்டு ஒருவர் கூட சுங்கத் துறையிடம் சிக்காமல் தப்பி ஓடியது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது