சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சோதனைகள் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (அக்டோபர் 16) பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு வடபழனி, வெங்கடேசபுரம், RMC பிளாட் என்ற முகவரியிலுள்ள வீட்டை காவல் குழுவினர் கண்காணித்தனர். அங்கு, சிலர் பணம் பந்தயம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், சூதாட்டத்தில் ஈடுபட்ட பாரதி நகரைச் சேர்ந்த சதாசிவம், வடபழனியைச் சேர்ந்த அப்துல் காதர், அசோக் நகரைச் சேர்ந்த மனோஜ்குமார், வடபழனியைச் சேர்ந்த சுதாகர், சுந்தர், அரூண் பாஷா, பெருமாள், சீனிவாசன் ஆகிய எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 1,01,360 ரொக்கப்பணமும், எட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திருநங்கையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - அடையாளம் தெரிய நபர்கள் கைவரிசை