புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(டிச.28) ஆலோசனை நடத்தினார்.
ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள், ஊரடங்கு தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கோவிட்-19 பெருந்தொற்றுநோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்படுவதுடன், இருவேளையும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று உள்ள பகுதிகளுக்கு வாகனம் சென்று, மக்களை பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளித்து, தொற்றாளர்களை குணமடையச் செய்து வருகிறோம். பொதுமக்கள் முக்கவசம் அணியாதது வருத்தமளிக்கிறது. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியரும் பொதுமக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்ட காலகட்டத்திலும் 74 புதிய தொழில்கள் தமிழகத்தில் தொடங்குவதற்கு முனைப்போடு செயல்பட்டது. அதன் மூலம் 61,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. மாநிலம், மாவட்டங்கள் அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் கடன் உதவித் திட்டம் விரைந்து கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் கடன் உதவி திட்டம் (CORUS திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கிராமப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பெருக்க, சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : முதலமைச்சர் பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் முருகன் சந்திப்பு!