சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு போன்ற படிப்புகளில் சேர்வதற்கு கடந்த 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (ஆக.8) காலை 11 மணி வரையில், 61 ஆயிரத்து 592 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். 27 ஆயிரத்து 569 மாணவர்கள் விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை செலுத்தியும், கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 22 ஆயிரத்து 936 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் 44 ஆயிரத்து 858 மாணவர்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேர்வதற்கு 42 ஆயிரத்து 620 பேரும், டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு 8,789 பேரும், டிப்ளமோ சான்றிதழ் படிப்பிற்கு 4,178 பேரும், டிப்ளமோ ஆப்தோமெட்ரி படிப்பிற்கு 791 பேரும், டிப்ளமோ பார்மசிக்கு 2,984 பேரும் என விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக்கல்லூரியில் 2,536 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன.
அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ நர்சிங் படிப்பானது 25 அரசு கல்லூரிகளில் 2,060 இடங்கள் உள்ளன. சான்றிதழ் படிப்புகளில் 27 கல்லூரிகளில் 8,596 இடங்கள் உள்ளன.
இதையும் படிங்க: ஆக.17 ஆம் தேதி துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி