சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் நேற்றைய முன்தினம் (டிச. 14) அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த இரண்டு மாணவர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை என நேற்று முடிவுகள் வெளியாகின.
இருந்தபோதிலும், அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 550 மாணவர்களுக்கு நேற்று (டிச. 15) ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆறு மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் கிண்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க உள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச. 16) ஆய்வுசெய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஆறு மாணவர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் ஆயிரத்து 104 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 191 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாணவர்கள் முகக் கவசம் அணியாமல் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்ததுதான்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பொழுதுபோக்கு, மதக் கூட்டங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் அறிவிப்பு