சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தனது பணியைத் துரிதப்படுத்தியுள்ளது.
அதன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வாக்காளர்கள் பட்டியல், வாக்குச் சாவடி பட்டியல்களைத் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி வாக்குச்சாவடி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து பரிசீலிக்கப்பட்டு, பெறப்பட்ட ஆட்சேபனைகள், கருத்துகளின் திருத்தங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு ஆண், பெண் வாக்காளர்களுக்காக தலா 255 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5ஆயிரத்து 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள், 200 வார்டு அலுவலகங்களிலும் நாளை (நவ.17) முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு கலைக்கல்லூரி: உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் முதல்வர்களாக நியமனம்