மக்கள் நல்வாழ்வுத் துறை, தேசிய சுகாதார அமைப்பு, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை திட்டம், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து உலக இதய தினத்தை கொண்டாடின.
அப்பொழுது அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி கோவிட்-19 மருத்துவமனையில் முதல்வர் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் 'நல் இதயம் பேணுவோம், இதய நோயைத் தடுப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "கரோனா காலத்தில் இதய நோய், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கரோனா அறிகுறி இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுகாதாரத் துறையில் தொடர் நடவடிக்கையால் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமில்லாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதய நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வசதிகள், உயிர் காக்கும் மருந்து அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 19 ஆயிரத்து 361 உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 ஆயிரத்து 667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்தாயிரத்து 390 பேர் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள்" எனத் தெரிவித்தார்.