கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சிப்காட் தொழில் பூங்கா தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பல தொழிலாளர்கள் தாங்களே வீட்டை வாடகை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் 40 பேர் அரசு அனுமதி ஏதுமின்றி ஒரு கன்டெய்னர் லாரியில் ஏறி மறைந்துகொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் செல்ல முயன்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் லாரியில் ஏறி செல்வது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து லாரியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் கன்டெய்னர் லாரியில் இருந்து 40 வடமாநில தொழிலாளர்களை மீட்டு அவர்களை சமாதானப்படுத்தி அரசு அனுமதியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கே அனுப்பி வைத்தனர். மேலும் அரசு அனுமதியின்றி வட மாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல முயன்ற லாரியையும் பறிமுதல் செய்தனர்.