சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ்(19). இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரியன்(எ)பிரியதர்ஷன்(19) என்ற சிறுவயது நண்பரும் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் போட்டி போட்டுக்கொண்டு ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சார்லஸ் ஒரு வீடியோவை பதிவு செய்தால் போதும் அவருக்கு லைக்குகள் வந்து குவியும். அது மட்டுமல்ல சக மாணவ, மாணவிகளே அதைப் பார்த்துவிட்டு நேரில் சென்று புகழ்ந்து பேசுவார்களாம். இதையெல்லாம் கண்டபோது, சார்லஸுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்து தான்தான் ஹீரோ என நினைத்துக் கொள்வாராம்.
பொறாமையும் மிரட்டலும்: அவரது நண்பர் பிரியதர்ஷனும் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவு செய்தும் லைக்குகள் கிடைக்காததால், லைக்குகளை அள்ளும் சார்லஸை அழைத்து, 'நீ.. இனி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்யக்கூடாது; சரியா?' என்று மிரட்டியுள்ளார்.
இதேபோல, நான் வீடியோவை பதிவு செய்வேன் என்று கூறி சார்லஸ், பிரியதர்ஷனைக் கிண்டல் செய்வதுபோல, "நீங்கள் மட்டும் அவன் குறுக்கே, போய்டாதீங்க.. சார்" என்ற கே.ஜி.எப் திரைப்பட டயலாக்கை வைத்து ஒரு வீடியோவை உடனே அப்லோட் செய்துள்ளார்.
ரீல்ஸால் உருவான பழிவாங்கும் எண்ணம்: அதைப் பார்த்து ஆத்திரமடைந்த பிரியதர்ஷன் சார்லஸை சும்மா விடக்கூடாது என்பதற்காக, கடந்த 23ஆம் தேதி, தனது பிற நண்பர்களை கத்தியுடன் கல்லூரி அருகே வரவழைத்து மறைந்திருக்குமாறு கூறியுள்ளார். அப்போது சார்லஸ் கல்லூரி முடித்து வீட்டுக்கு சுமார் 1:30 மணி அளவில் வெளியே வந்துள்ளார்.
சம்ந்தமே இல்லாதவருக்கு நிகழ்ந்த வெட்டு: அப்போது பதுங்கியிருந்த கும்பல் சார்லஸை வெட்டுவதற்காக ஓடி சென்றுள்ளனர். கத்தியுடன் வருவதைக் கண்ட சார்லஸ், அங்கிருந்து அலறி அடித்து ஓடியுள்ளார். அப்போது, அதே கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவன் ஒருவன் வரும்பொழுது சார்லஸின் நண்பன் என்று நினைத்து அவர் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அந்த கும்பல் தப்பிச்சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கல்லூரி மாணவனை மீட்டு சகமாணவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டன. மேலும், இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
4 மாணவர்களுக்கு சிறை: இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தநிலையில், மேற்கு தாம்பரம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரணவ்(19), புது பெருங்களத்தூர் முத்தமிழ் நகர் குண்டு மேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசு(19), புது பெருங்களத்தூர் பாரதிநகரைச் சேர்ந்த நந்தகுமார்(19), சந்தோஷ்(19), 17 வயது சிறுவன் ஆகிய கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து சென்று 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 4 பேரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயதுடைய சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரியதர்ஷன் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாகப் போலீசார் தேடி வருகின்றனர். வீடியோக்களை பதிவு செய்து லைக்குகளை அல்ல நினைத்த சார்லஸை அழைத்த போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்தக் கால மாணவ-மாணவர்கள் கல்வியில் செலுத்தும் ஆர்வத்தைவிட தங்கள் கையில் இருக்கும் செல்போன் மீதும் அதனூடாக சமூக வலைத்தளங்களின்மீது வைக்கும் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. செல்போன் மூலம் மாணவர்கள் கல்வியறிவைப் பெறுவதைக் காட்டிலும், அதன் மூலம் அவர்கள் கல்வியறிவைப் பெறும் நோக்கத்திலிருந்து வெகு விரைவாக விலகிச்சென்று இது மாதிரியான தேவையற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறது.
அதற்கு மோசமான உதாரணமாக, பல்லாவரம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே இன்ஸ்டாகிராமில் லைக்குகளுக்காக ஏற்பட்ட வாய்த்தகராறு கொலை செய்யும் அளவுக்கு மாணவர்களைத் தூண்டியுள்ளதைக் காட்டுகிறது.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: கார் கதவுகள் மூடியதால் 3 சிறுவர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு