சென்னை: பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச்சேர்ந்த ஜாவித் வயது(37). வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் துணிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மே.01) மாலை இரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரது கடைக்குச்சென்று கத்தியைக்காட்டி, மிரட்டி துணி வேண்டும் என்று கூறி துணி எடுத்துள்ளனர். அதன்பிறகு ரூ.10,000 கேட்டு மிரட்டி உள்ளனர்.
ஜாவித் பணம் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியை எடுத்து, அவரின் கையை வெட்டியுள்ளனர். இதனால், காயம் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் சிசிடிவி ஆய்வு: இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், அங்கு வந்த செம்பியம் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஏற்கெனவே, பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்திகள் பறிமுதல்: இதனையடுத்து இன்று (மே.02) காலை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் பதுங்கியிருந்த வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த கலை (எ) கலைச்செல்வன்(26), மாதவரம் பகுதியைச்சேர்ந்த செல்வகுமார் (எ) பச்சைப்பாம்பு(26), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் (எ) ஜோதிகுமார்(20), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினகரன்(19) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மூன்று பட்டா கத்திகள் மற்றும் 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 பேருக்கு சிறை: மேலும், பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி பி.வி. காலனியில் 2 ரவுடி கும்பல் செயல்பட்டு வந்ததும், அதில் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தொப்பை கணேசன் என்பவர் இன்று அதே பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு வருவதை அறிந்திருந்த எதிர் கோஷ்டியினர் அவரை கொலை செய்யத் திட்டம் தீட்டியதும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகளுடன் பதுங்கி இருந்ததும், இவர்கள் போதையில் துணிக்கடையில் சென்று தகராறு செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதையில் 3 குழந்தைகளை கொன்று கினற்றில் வீசிய கொடூர தந்தை - போலீஸ் விசாரணை