சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் (shankar jiwal) உத்தரவின்பேரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருள்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருள்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 01.01.2021 முதல் 19.11.2021 வரையில் சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 218 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 85 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகள், கஞ்சா, போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த 19 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகள், கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற 4 குற்றவாளிகள், போக்சோ மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 351 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செம்மெஞ்சேரி பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த ஜோசப், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் எனக்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக 44லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதனகோபால் ஆகியோரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 13.11.2021 முதல் 19.11.2021 வரையிலான ஒரு வார காலத்தில், கொலை, வழிப்பறி மற்றும் வேலை வாய்ப்பு மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னைக் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!