தமிழ்நாட்டில் கரோனாவால் சென்னை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என சென்னையில் 172 பேர் நேற்று வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மண்டலம் 1 (திருவொற்றியூர்), 5 (ராயபுரம்), 8 (அண்ணா நகர்) உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கரோனாவால் சென்னை அதிக அளவில் பாதிக்கப்பட்டாலும், ஆறுதல் அளிக்கும் விஷயமாக சிலர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சென்ற மார்ச் 25ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், 25 வயது ஆண் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்த்தைச் சேர்ந்த மூவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், 28 நாள் சிகிச்சை முடிந்து அவர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், இன்று காலையில் மூன்று பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் வாழ்த்து கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஏற்கெனவே, 72 வயது மூதாட்டி ராஜீவ் காந்தி அரசு மருந்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 50 வயதைக் கடந்தவர்கள். வயதானவர்களைக் கரோனா பாதித்தால், அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சையில் குணமடைந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.