சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சேவை வரித்துறையில் மூத்த நுண்ணறிவுப் பிரிவு அலுவலராக பணிபுரியும் மணி கண்ணன் (54) என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியா தெருவில், தனது மனைவி மகனுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் மணி கண்ணனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.7) காலை அடுத்த தெருவில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்குச் சென்ற மணி கண்ணன் வெகு நேரமாகியும் திரும்பாததால் அங்குச் சென்ற அவரது மகன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, மணி கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையின் விசாரணையில் சிக்கிய ஒரு கடிதத்தில் மணி கண்ணன் தனக்கு வாழப்பிடிக்காததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் சென்னை அயனாவரத்தில் உள்ள கோயில் தெருவில் வசித்து வரும் குப்புசாமி (72) என்ற சலூன் கடைக்காரரும், ஊரடங்கின் காரணமாக தனது கடைக்கு ஐந்து மாத வாடகை கொடுக்க முடியாததால் மனமுடைந்து கடையினுள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் சென்னை சூளை மேட்டில் உள்ள ரிசர்வ் வங்கி குடியிருப்பில் வசித்து வரும் ஜான்சன் என்பவரின் 15 வயது மகள் விளையாட செல்போனை அண்ணன் தரவில்லை என்ற கோவத்தில் மனமுடைந்து தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஒரே நாளில் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் நுங்கம்பாக்கம், அயனாவரம், சூளைமேடு பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.