சென்னை: தி.நகரில் அமைந்துள்ள போத்தீஸ் கடையில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வரும் சாகுல் ஹமீதின் செல்போன் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடிய நானா முகமது என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் கடந்த மாதம் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்ற போது, கணக்கில் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சாகுல் தி.நகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
தனது வங்கி கணக்கில் இருந்து 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை திருடப்பட்டு விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில் காவல்துறியினர் விசாரணை நடத்திய போது, சாகுல் ஹமீது வங்கி கணக்கிலிருந்து கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை சிறுக சிறுக பணம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சாகுல் ஹமீதின் செல்போன் எண் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, கடந்த சில நாட்களாக வேறு செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணிலிருந்து பல வங்கி கணக்கிற்கு 3.23லட்சம் ரூபாய் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் தி.நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் நானா முகமது என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நானா முகமது போத்திஸ் துணிக்கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருவதும், சாகுல் ஹமீதுக்கு தெரிந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக போத்தீஸ் கடையில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் சார்ஜ் போடுவதற்காகவும் அருகேயுள்ள நானா முகமது கடையில் சாகுல் ஹமீது அடிக்கடி செல்போனை கொடுத்து செல்வது விசாரணையில் தெரியவந்தது.
அப்போது சாகுல் ஹமீதின் செல்போனில் இருந்து சிம்கார்டை எடுத்து, நானா முகமது தனது செல்போனில் பொருத்தி அவரது எண்ணில் போன் பே ஆப்பை டவுன்லோடு செய்து சாகுல் ஹமீது வங்கி கணக்கில் இருந்து சிறுக சிறுக பணம் திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 3.23 லட்ச ரூபாய் நானா முகமதிடம் இருந்து காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி எண் மற்றும் ஓடிபியை யாரிடமும் பகிரவேண்டாம் எனவும் சைபர் கிரைம் பிரச்சனைக்கு உடனடியாக 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருட்டு பைக்கை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்திய தலைமைக்காவலர்