சென்னை: மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பில் சோதனை செய்ததில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் மணற்பரப்பில் மறைத்து வைத்திருந்த மொத்தம் 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை கைது செய்து மெரினா காவல் நிலைய போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவருடன் சேர்ந்து வசித்து வந்த 35 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணற்பரப்பில் கண்ணகி சிலை பின்புறம் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விஷால் வினோத் பவார் என்பவரை மெரினா போலீசார் கைது செய்தனர். மணற்பரப்பில் 2 பாட்டில்கள் சாராயம் எடுத்து கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கி கொண்டார். மேலும் சாராய பாட்டில்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து நேற்று (மே.17) மெரினா மணற்பரப்பில் போலீசார் தோண்டினர்.
அப்போது 2 லிட்டர் கேனில் சாராய பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மறைத்து வைத்திருந்த 8 பாட்டில்கள் (2 லிட்டர்) சாராயம் தோண்டி எடுக்கப்பட்டது. அதேபோல் வாட்டர் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான விஷால் வினோத் பவாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை ரயில் மூலமாக வாங்கி வந்து மெரினா மணற்பரப்பில் புதைத்து வைத்து விற்பதால் யாருக்கும் தெரியவில்லை. மேலும் தண்ணீர் போல இருப்பதால் சந்தேகம் வரவில்லை. இவர்களுக்கு சாராயத்தை சப்ளை செய்த ஆந்திரா நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு - ஓலா பைக் ஓட்டுநர் கைது