தமிழ்நாட்டில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோல தற்போது கரோனா தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை வலுப்படுத்துவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
இதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ஏற்கனவே 4,893 செவிலியர், 1,508 ஆய்வக நுட்புனர்கள், 2,715 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரைப் பணியமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
கரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்தச் சூழலில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பு முடித்த 574 அரசுப் பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களை (Non-Service Post Graduates) மாத ஊதியமாக ரூ.75,000 என்ற ஊதியத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, ரூ.60,000 மாத ஊதியத்தில் 665 மருத்துவர்களையும், ரூ.15,000 ஊதியத்தில் 365 ஆய்வக நுட்புனர்களையும், ரூ.12,000 ஊதியத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களையும் பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மூன்று மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள் பணியில் இணைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைப்பு