சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது,
"தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர். மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் கணக்கிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களை விட, கடந்த ஆண்டுகளில் தேர்வு எழுதியவர்கள் தான் அதிகளவில் உள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு சற்றுக் குறைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவக்கல்லூரிகளால் கிடைத்த பலன்
அதேபோல், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் செயல்பாடுகள் நன்றாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக்கல்லூரிகள் வராவிட்டால் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்து இருக்கும். இதனால் தான் மருத்துவப் படிப்பில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது.
700 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும், 680 மதிப்பெண்களுக்கு மேல் 64 மாணவர்களும், 650 மதிப்பெண்களுக்கு மேல் 230 மாணவர்களும் எடுத்துள்ளனர்.
மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தனியாக கோச்சிங் சென்ற மாணவர்கள் மட்டுமே அதிகளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களும் சரியான பயிற்சி (கோச்சிங்) இல்லாமல் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கட்-ஆஃப் மதிப்பெண்கள் கடந்தாண்டை விட நடப்பாண்டில் குறையும். நடப்பாண்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் இடம் கிடைத்ததால் பயன் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் சற்று அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.பி.பி.எஸ் கட்ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி