சென்னை: தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. அதில் ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆண் அணில் குரங்குகள்
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட இரண்டு ஆண் அணில் குரங்குகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதனை அலுவலர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.
பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
சந்தேக நபர்கள் கைவரிசை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளும் காணாமல்போயின. மேலும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை வெட்டிவிட்டு இரண்டு அணில் குரங்குகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பூங்கா வனசரக அலுவலர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அரியவகை அணில் குரங்குகள் திருடுபோனது குறித்து புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையில் புகார்
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல் துறை உயிரியல் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்தனர். இதையடுத்து அரியவகை அணில் குரங்குகளைத் திருடிச் சென்ற நபர்களைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இரண்டு அணில் குரங்குகளும் வெளிநாட்டுக்குக் கடத்திச் செல்லவிடாமல் தடுக்க விமான நிலையம், துறைமுகங்களில் காவல் துறை தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரிய வகை உயிரினம்
காணாமல்போன அந்த இரண்டு அரியவகை அணில் குரங்குகளின் முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும், வால் பகுதி முதல் கழுத்துவரை அணில் உடலமைப்பையும் காணப்படும்.
இந்த அணில் குரங்கு அரியவகை என்பதால் பன்னாட்டுச் சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்படும். குரங்குகள் காணாமல்போனது குறித்து பூங்கா தரப்பிலும் விசாரணை மேற்கொண்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டி.எம்.பி. வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.73 கோடிக்கு கடன்: 8 பேர் கைது