தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் மூக்குக் கண்ணாடிகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் வழங்கப்படுகிறது.
'கண்ணொளி காப்போம்'
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "'கண்ணொளி காப்போம்' திட்டத்தின்கீழ் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கண்ணில் ஏற்படும் குறைபாடுகளுக்களான ஒளிவிலகல் பிழையினை சரி செய்வதற்கும், பார்வை மந்தம் ஏற்படாமல் தடுப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கப்படுகிறது.
கரோனா தொற்றினால் கடந்த ஒன்றரை வருடங்களாக வழங்க இயலவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டின் 43 மருத்துவ மாவட்டங்களின் மூலம் இரண்டு லட்சம் மூக்குக் கண்ணாடிகளை கண்குறைபாடுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, கல்வித்துறை அலுவலர்கள் மாவட்ட திட்ட மேலாளர்களை தொடர்புகொண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.