நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு சென்னை காவல் ஆணையரகத்தை பிரித்து சமீபத்தில் தாம்பரம் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட புதிய இரு ஆணையரகங்களுக்கும் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் பணிகளானதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கான துணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்த குமார் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராகவும், தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு-2-ன் எஸ்.பி-யாக பணியாற்றி வந்த சிபி சக்ரவர்த்தி தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி-யாக பணியாற்றி வந்த மூர்த்தி தாம்பரம் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும், சுப்புலட்சுமி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் ஆவடி போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மது விலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி பெருமாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், உமையாள் ஆவடி தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மதுரை மது விலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி மகேஷ்வரன் சென்னை அமலாக்கப்பிரிவுக்கும், அண்ணா நகர் துணை ஆணையர் தீபா கனிகர் புது டில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்தப் பொறுப்பில் இருந்த செந்தில் குமார் கோவைப்புதூர் 4வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆகவும், சென்னை நிர்வாகப்பிரிவு துணை ஆணையர் மகேந்திரன் ஆறு மாத காலமாக காலியாக இருந்த அடையாறு துணை ஆணையர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் பிரதீப் பரங்கிமலை துணை ஆணையராகவும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவ பிரசாத் அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையர் அருண் பாலகோபாலன் தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராகவும், வேலூர் உதவி எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு