சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள புது பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் யசோதா ராணி (42). இவர் அதே பகுதியில் தையல் கடை நடத்திவந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் யசோதா ராணியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குத்தி கொலை செய்தார். பின்னர் அவர் இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேலையூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (42) என்பவரை கைதுசெய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வ குமாருக்கும், யசோதா ராணிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று செல்வகுமார் யசோதா ராணியை வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். ஆனால் யசோதா ராணி ”எனக்கு வேலை இருக்கிறது நான் வர முடியாது” என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து யசோதா ராணியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த யசோதா ராணி, ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்து துடிதுடித்து உயிருக்கு போராடினார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஒன்றுகூடினர். நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த செல்வகுமார் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த அவரை காவலர்கள் கைதுசெய்தனர்.
தாம்பரம் அருகே பட்டப்பகலில் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: காதல் விவகாரம்: மகள் கழுத்தை நெறித்து கொலைசெய்த பெற்றோர் கைது!